பணம் வந்த கதை – பகுதி 8: Back to அய்யாவு’s story!

பணம் வந்த கதை – தொடர்!
Share this News:

“எங்கே விட்டேன் அய்யாவு கதையை?” என்று கேட்டார் சேது.

“சமூகத்துல பெரும் செல்வாக்கு உள்ளவனா ஆகணும் என்பதற்காக ஊர் மக்களையெல்லாம் கடனாளிகளாக்க திட்டம் போட்டான் என்று சொன்னீங்க”

“கரெக்ட்.. அய்யாவு திட்டம் போட்டபடியே எல்லாம் நடந்தது. ஊர் மக்கள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து அவனுடைய கடனை ஒட்டு மொத்தமாக அடைக்க விரும்பினாலும் அது நடக்காது என்பதை யாருமே உணரவில்லை. ‘பணம்’ என்ற ஒரு புதிய ‘வஸ்து’வின் மூலம் அவர்கள் அனைவரையும் அவன் தூண்டிலில் சிக்கிய மீன் போல ஆக்கி வைத்திருந்தான்.

அய்யாவுக்கு இது மட்டும் போதவில்லை.

அவனது தொழிற்சாலையின் பின்புறத்தில் ஒரு இரும்புப் பெட்டகம் இருந்தது. அய்யாவுவின் திட்டத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல அதுதான் உதவியது.

“மதிப்பு வாய்ந்த பொற்காசுகளை பாதுகாப்பது உங்களுக்குச் சிரமமாக இருந்தால் என்னிடம் வாருங்கள். என்னிடமிருக்கும் இரும்புப் பெட்டகத்தினுள் உங்கள் நாணயங்களை வைத்துச் செல்லுங்கள். உங்களுக்கு எப்போது தேவையோ அப்போது வந்து அதை எடுத்துச் செல்லுங்கள். எனது இந்தச் சேவைக்காக ஒரு சொற்பமான சேவைக் கட்டணம் செலுத்தினால் போதும்”.

அய்யாவுவின் அடுத்த வலை இது என்பதை உணராமலேயே மக்கள் அந்தச் சேவையையும் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்கள். அவ்வாறு பொற்காசுகளைக் கொண்டு வந்து தருபவர்களிடம் ‘இன்னாருடைய இவ்வளவு பணம் என்னிடம் இருக்கிறது’ என்று ஒரு துண்டுச் சீட்டில் எழுதி கையெழுத்து போட்டு (அல்லது கைநாட்டு வைத்து) கொடுப்பான் அய்யாவு.

வியாபாரிகள் கொள்முதலுக்குச் செல்லும்போது அய்யாவுவிடம் வந்து நாணயங்களை எடுத்துச் செல்வதும் விற்பனையில் கிடைக்கும் நாணயங்களை மீண்டும் வந்து அவனிடம் ஒப்படைப்பதும் வாடிக்கையானது. அய்யாவு அதையும் எளிதாக்கினான்.

“ஏன் வீணா அலையுறீங்க? கொள்முதலுக்குப் போறப்போ நாணயங்களைத் தூக்கிட்டு போவதற்குப் பதிலா நான் கொடுக்குற துண்டுச் சீட்டையே அந்த வியாபாரியிடம் கொடுங்கள். அவர் அந்தச் சீட்டை என்னிடம் கொண்டு வரும்போது அதை வாங்கிக் கொண்டு அவருக்குச் சேர வேண்டிய நாணயங்களை நானே கொடுத்து விடுகிறேன்.” மக்களுக்கு இதுவும் பிடித்திருந்தது. அவர்களுக்கு மேலும் வசதி செய்து தருவதற்காக அய்யாவு தன் துண்டுச் சீட்டுகளை சில்லறைத் தொகைகளுக்கும் எழுதிக் கொடுத்தான்.

“என்னங்க.. உங்களைத்தானே? மீன் பொரிக்குறதுக்காக சட்டியை அடுப்பில் வச்சுட்டேன். பார்த்தால் சொட்டு கூட எண்ணை இல்லை.. குடுகுடுன்னு ஓடிப்போய் கடையில கொஞ்சம் எண்ணை வாங்கிட்டு வாங்க” என்று மனைவி விரட்டும்போது முதலில் அய்யாவுவிடம் போய் இரும்புப் பெட்டகத்தைத் திறந்து நாணயத்தை எண்ணி எடுத்துக் கொண்டு மீதத்தைக் கணக்குப் பார்த்து அவனிடம் ஒப்படைத்து துண்டு சீட்டு எழுதி வாங்கிக் கொண்டு பிறகு கடைக்கு ஓட வேண்டிய தேவை இல்லை.

அய்யாவுவின் துண்டுச் சீட்டையே கடைக்காரனிடம் கொடுத்து எண்ணை வாங்கிக் கொண்டு சடுதியில் திரும்பி மனைவியிடம் திட்டு வாங்குவதிலிருந்து தப்பி விடலாம். ‘நல்ல மூளைக்காரனப்பா இந்த அய்யாவு’ என்று சிலாகித்தார்கள் மக்கள்.

கடைக்காரர்களுக்கும் இந்த நடைமுறை எளிதாக இருந்தது. அய்யாவுவின் கையெழுத்து உள்ள சீட்டுகளை எப்போது வேண்டுமானாலும் அவனிடம் கொடுத்து நாணயங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது தம் கொள்முதலுக்காக அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறாக துண்டுச் சீட்டுகள் கைமாறி கைமாறி பயணிக்க ஆரம்பித்தன. வியாபாரப் பரிவர்த்தனைகளுக்காக தங்க நாணயங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக துண்டுச் சீட்டுகளையே மக்கள் பயன்படுத்தும் நிலை உருவானது.

வெகு ஆபூர்வமாகவே தவிர யாரும் தன்னிடம் உள்ள தங்க நாணயங்களை பெற்றுச் செல்ல வருவதில்லை என்பதை அய்யாவு நன்கு புரிந்துக் கொண்டான்.

அவனது திட்டத்தின் அடுத்தக் கட்டத்தை செயல்படுத்தும் வேளை கனிந்து விட்டது. அது என்ன?

தொடரும்

– சலாஹுத்தீன் பஷீர்

பொருளாதார அடியாள் பகுதி -7 பணம் வந்த கதை


Share this News:

Leave a Reply