சென்னை (27 மே 2020): திரையுலகில் மற்ற நடிகைகள் போல பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தனியார் யூடூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில பல பரபரப்பு தகவல்களை அவர் வெளியிட்டார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது: சினிமாவில் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்ததாக குறிப்பிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், அதை தைரியமாக எதிர் கொண்டதாகத் தெரிவித்தார். சினிமாவில் முதலில் தமக்கு காமெடி நடிகர்களின் ஜோடியாக வர தான் வாய்ப்பு கிடைத்தது என்றும், ஆனால் அதனை தாம் ஏற்கவில்லை என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்தார்.
தந்தையில்லாத குடும்பத்தில் சென்னையில் நடுத்தர வர்க்கத்தில் வளர்ந்த அவர், முக்கியமான கட்டத்தில் இரண்டு சகோதரர்களை மரணம் தழுவியதாகவும், அதன் பின்பு முழுவதும் தாயின் முயற்சியில் அவர் செய்த சிறு வேலைகளின் மூலமே குடும்பம் வளர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தனது நிறம் மற்றும் தமிழில் பேசியது இரண்டும் சினிமாவில் நுழைய பெரிய தடையாக இருந்ததாக தெரிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ், மற்ற நடிகைகளைப் போல பாலியல் சீண்டல்களை சந்தித்ததாகவும் அதனை தைரியமாக எதிர் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் சினிமாவில் ஒரு சிலரைத் தவிர யாரும் ஆதரிக்கவில்லை என்று தெரிவித்த ஐஸ்வர்யா, தனி பெண்ணாக போராடி தற்போது நல்ல நிலையை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் , கனா, வட சென்னை, தர்மதுரை உள்ளிட்ட படங்களில் தனது தனித்தன்மையான நடிப்பை வெளிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.