நெய்வேலி (07 பிப் 2020): விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பை நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் நடத்தக் கூடாது என்று பாஜகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
நேற்று முன்தினம் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜயை வருமான வரித்துறையினர் சென்னைக்கு அழைத்து வந்து 23 மணிநேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்த நிலையில் நடிகர் விஜய் இன்று முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் .
இந்த நிலையில் என்எல்சி சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சுரங்கத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட பகுதியில் எப்படி படப்பிடிப்பை நடத்தலாம் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
மாஸ்டர் படப்பிடிப்பு என்எல்சி 2ஆவது சுரங்கம் அமைந்துள்ள பகுதியில் நடைபெற்று வருகிறது. கடந்த 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை இப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த உரிய அனுமதி வாங்கி படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.