டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என தொடர்ந்து இரு வெற்றிப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. செவன் ஸ்க்ரீன் லலித் தயாரித்து ரெட் ஜெயிண்ட் இப்படத்தை வெளியிட்டுள்ளது.
பணத்துக்காக உலக நாடுகளில் உள்ள முக்கிய புள்ளிகளை கொலை செய்கிறார் விக்ரம். யார் கொலை செய்தார், எதற்காக கொலை செய்தார் என ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கணிதம் மூலம் கணக்கு போட்டு ஒவ்வொரு நபரையும் கொலை செய்கிறார்.
இந்த கொலைகளை செய்யும் விக்ரமை கண்டுபிடிக்க இஃபார்ன் பதான் இன்டர்போல் அதிகாரியாக என்ட்ரி தருகிறார். கொலை விசாரணையை தவறாக செய்து வருகிறீர்கள் என்று இஃபார்ன் பதானுக்கு உதவியாக வருகிறார் மீனாட்சி. கணிதத்தில் புத்திசாலியான மீனாட்சி இந்த அணைத்து கொலைகளுக்கும் மூலதனமாக கணிதம் ஒன்று தான் இருக்கிறது என கண்டுபிடிக்கிறார்.
இதை வைத்து விக்ரம் ஒரு கணிதம் அறிந்த கொலையாளி என்ற பாதையில் விசாரணை செல்கிறது. இது ஒரு புறம் சென்றுகொண்டிருக்கும் நிலையில் மற்றொரு புறம் விக்ரமின் பின்னணியில் இருந்து யார் அவரை செயல்படுத்துவது என்பதை உலகிற்கு தெரியப்படுகிறார் ஹாக்கர். இதன்பின் சற்று தடுமாறும் விக்ரமுக்கு அடுத்தடுத்து பல எதிர்பாரா திருப்பங்கள் காத்திருந்தது.
அதை எல்லாம் அவர் எப்படி எதிர்கொண்டார்.. இந்த கொலைகள் எல்லாம் பணத்துக்காக தான் விக்ரம் செய்கிறாரா? புதிதாக கதையில் முளைத்த இந்த ஹாக்கர் யார்? இந்த அணைத்து விஷயங்களுக்கும் பின்னணியில் இருக்கும் வில்லன் யார் என்பதே படத்தின் மீதி கதை.
சீயான் விக்ரம் நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளார். குறிப்பாக போலீஸ் விசாரணை காட்சியில் திரையரங்கத்தை தெறிக்கவிட்டுவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு கைதட்டல்களை தன்வசப்படுத்தியுள்ளார் விக்ரம். கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டியின் கதாபாத்திரம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை.
மிர்னாலினி ரவி மற்றும் மீனாட்சி இருவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்கள். விக்ரமின் சிறு வயது கதாபாத்திரம் படத்திற்கு பலம். அதே போல் விக்ரமின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ள சர்ஜன் காலித்தின் நடிப்பும் சூப்பர். இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ள இஃபார்ன் பதான் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை அளவாகவும் அழகாகவும் கொடுத்துள்ளார்.
வில்லன் ரோஷன் மேத்திவ்வை வில்லனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் வில்லன் என்று காட்டிக்கொள்ள கண் எதிரில் பார்க்கும் நபர்களை எல்லாம் கொன்று விடுகிறார். இதுதான் வில்லத்தனமா?. மற்றபடி கே.எஸ். ரவிக்குமார், ரோபோ ஷங்கர், ஜான் விஜய், ஆனந்த் ராஜ், மியா ஜார்ஜ், முகம்மது அலி ஆகியோரின் நடிப்பு ஓகே.
இயக்குனர் அஜய் ஞானமுத்து எடுத்துக்கொண்ட கதைக்களம் சூப்பர். ஆனால், இயக்கமும் திரைக்கதையும் சற்று சொதப்பல் ஆகியுள்ளது. குறிப்பாக படத்தின் முதல் பாதி எப்போது நிறைவடையும் என்ற அளவிற்கு சலிப்பை ஏற்படுத்துகிறது திரைக்கதை.
அஜய் ஞானமுத்துவுடன் சேர்த்து நீலன் கே.சேகர், கண்ணா ஸ்ரீனிவாசன், அசாருதீன் அலாவுதீன், இன்னாசி பாண்டியன் மற்றும் பரத் ஆகியோர் படத்தின் எழுத்தாளர்களாக இருந்தும் படத்தின் போக்கில் தொய்வு.
கோப்ரா எதிர்பார்ப்பை சரி செய்யவில்லை.