சென்னை (13 ஜன 2020): தர்பார் படத்தில் சசிகலா குறித்து இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப் பட்டுள்ளன.
ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் உலகமெங்கும் 7 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இப்படத்தின் ஒரு காட்சியில், சிறை அதிகாரி ஒருவர் ரஜினியிடம் ”இப்ப எல்லாம் சிறைக் கைதிகள் ஜாலியா ஷாப்பிங் போயிட்டு வர்றாங்க சார்…” என்று கூறுவதாக வசனம் உள்ளது. பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை வைத்தே இந்த வசனம் வைக்கப்பட்டுள்ளது என்று பேச்சு எழுந்தது.
இந்நிலையில் படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்த காட்சிகள் பலரது மனதை புண்படுத்தும் வகையில் இருந்ததால் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, சமீபத்தில் சிறையை விட்டு வெளியே ஷாப்பிங் சென்று வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்த சிசிடிவி புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.