சிலர் தான் தைரியமாக அரசியல் அவலங்களை படத்தில் முன்வைக்கிறார்கள். அந்த தைரியசாலிகளில் ஒருவர் இயக்குனர் ராஜூ முருகன். ஜோக்கர் படத்தின் பின் தற்போது ஜிப்சி மூலம் அதிரடி கொடுத்திருக்கிறார்.
ஹீரோ ஜீவா சிறுவயதிலே தன் தந்தை, தாயை இழக்கிறார். ஆதரவற்ற அவரை ஒரு குதிரைக்காரர் எடுத்து வளர்க்கிறார். நாடோடியாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல ஊர்களுக்கு சுற்றி திரிகிறார்கள். ஒரு நாள் அந்த குதிரைக்காரர் ஜீவாவிடம் ஒரு விசயத்தை சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார்.
ஆதரவற்ற ஜீவாவுக்கு சே என்னும் அந்த குதிரையே நண்பனாக இருக்கிறான். பிழைப்புக்காக செல்லும் போது இஸ்லாமிய குடும்பத்து பெண்ணாக ஹீரோயினை சந்திக்கிறார். இவர்களுக்கான பிணைப்பு ஒரு நீண்ட உணர்வாகவே போய்க்கொண்டிருக்கிறது.
வீட்டில் வரன் பார்த்து நிக்காஹ் செய்யவுள்ள நேரத்தில் ஜீவாவுடன் ஊரை விட்டு வேறொரு இடத்தில் குடியேற அங்கு என்னென்னவோ எதிர்பாராத கொலை சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன. உதவியாளரும், குதிரையும் கொல்லப்பட ஜீவா துடிதுடித்துப்போகிறார். இதற்கிடையில் ஜீவா கைது செய்யப்பட்டு போலிஸின் சித்ரவதைக்கு ஆளாகிறார்.
கர்ப்பமாக இருக்கும் ஹீரோயின் என்ன ஆனார்? ஜீவா விடுதலையானாரா? கொலைகளின் பின்னணி என்ன என்பதே இந்த ஜிப்சி கதை.
ஹீரோ ஜீவா நீண்ட காலமாக ஒரு வெற்றியை பதிவு செய்ய காத்திருந்தார். இப்படம் அவருக்கான சரியான களம் என்றே சொல்லலாம். இனி மீண்டும் அடுத்த இன்னிங்ஸ் தொடங்குவார் என்றும் நம்பலாம். ஆங்கிலம், தமிழ் என கலந்து அடிப்பதோடு அவ்வப்போது திரு குரானின் வேத வாக்குகளையும் எடுத்து வைத்தது பாராட்ட வேண்டியது.
ஹீரோயின் நடாஷா சிங். ஊர் பக்கம் இருக்கிற சாதாரண குடும்பத்து பெண் போல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடப்பதும், அதே வேளையில் காதல் அலையில் சிக்கும் போது கட்டுப்பாட்டை மீறுவதும் உணர்வுப்பூர்வமான நடிப்பு எனலாம். அதிகமாக படங்களில் பேசவில்லை என்றாலும் அவரின் தவிப்பு முக பாவனைகளின் வெளிப்பாடு. கண்களை கூர்மையாக்கிவிட்டன.
இயக்குனர் ராஜூ முருகன் ஏற்கனவே ஜோக்கர் படத்தின் மூலம் பொறுப்பற்ற அரசியல்வாதிகளுக்கு, அரசின் செயல்பாடுகளுக்கும் சொற்களால் அடி கொடுத்தார். சர்ச்சைகளுக்கிடையில் தேர்தலுக்கு பின் வெளியானாலும் வெற்றி பெற்று தேசிய விருதை தர அந்த தைரியம் தற்போது அவரை ஜிப்சி படத்தை கொடுக்க வைத்துள்ளது.
மத அரசியல் செய்வோரையும், அதற்காக கட்டவிழ்த்து விடப்படும் கலவரங்களையும், சமகால அரசியல் தீவிரவாதங்களையும் ஜிப்சியில் தோலுரித்துள்ளார். இரண்டும் முறை சென்சார் செய்யப்பட்டு தற்போது படத்தை களத்தில் இறக்கியுள்ளார். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
பார்க்க வேண்டிய படம்!