புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரத்தில் 85 வயது முஸ்லிம் மூதாட்டி அவரது வீட்டில் எரித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, தலைநகர் டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது.
இதனை அடுத்து வன்முறையாளர்கள் முஸ்லிம் வீடுகள், கடைகள், மசூதி என கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். 23 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 180 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான டெல்லி காம்ரி பகுதியில் பல வீடுகள் சூறையாடப்பட்டன. குறிப்பாக முஸ்லிம்கள் வீட்டுக்குள் நுழைந்த நூற்றுக்கும் அதிகமான வன்முறை கும்பல் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. பலர் படுகாயம் அடைதுள்ளனர். அங்கு வசித்து வந்த சல்மானி என்பவரின் 85 வயது தாய் அக்பரி என்பவர் வன்முறையாளர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு உயிரிழாந்துள்ளார்.
டெல்லியில் தொடரும் வன்முறை சம்பவங்கள் நாடெங்கும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.