அஹமதாபாத் (09 டிச 2022): ஆம் ஆத்மி கட்சியும் (ஏஏபி) மற்றும் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியும் குஜராத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளை பிரித்து காங்கிரஸின் கனவை தகர்த்துள்ளது.
குஜராத்தில் சிறுபான்மையினர், முதன்மையாக முஸ்லீம்கள், கடந்த பல தசாப்தங்களாக, குறிப்பாக 2002 பிந்தைய குஜராத் கலவரத்திற்குப் பிறகு காங்கிரஸின் விசுவாசமான வாக்காளர்களாக உள்ளனர்.
இந்நிலையில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடந்து, டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. பாரதிய ஜனதா கட்சி (BJP), 2002 கலவரத்திற்குப் பின்பு, ஜாதி வேறுபாடின்றி இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் தேர்தல் கணக்கீடுகளை செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சி ஹரிஜன், ஆதிவாசி மற்றும் முஸ்லீம் வாக்குகளை குறி வைத்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தன. மிக முக்கியமாக பல தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கக் கூடியதாக உள்ளது.
எவ்வாறாயினும், ஆம் ஆத்மி மற்றும் ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) ஆகியவற்றின் நுழைவு காங்கிரஸின் சிறுபான்மை வாக்கு வங்கியை சீர்குலைத்தது மட்டுமல்லாமல், தேர்தலில் ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட நிறுத்தாத ஆளும் பாஜகவுக்கு உதவியுள்ளது.
இந்த சட்டமன்றத் தேர்தலில், 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத்தில் பாரம்பரிய அரசியல் கட்சிகள் மிகக் குறைவான முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது. காங்கிரஸ் ஆறு முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தியது, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு டிக்கெட் வழங்கியது.
AIMIM 13 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, 12 இடங்களில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
ஆம் ஆத்மி கட்சி வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் அவர்கள் காங்கிரஸின் வாய்ப்புகளையும் பாரம்பரிய காங்கிரஸின் வாக்குகளையும் சீர்குலைத்து பாஜக வெற்றியடைய வாய்ப்பளித்துவிட்டனர்.