உள்நாட்டு விமானங்களில் பயணம் மேற்கொள்ள ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்!

Share this News:

புதுடெல்லி (21 மே 2020): உள்நாட்டு விமான சேவை வரும் 25-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பயணிகளுக்கான நடைமுறைகளை இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. பயணிகளுக்கு ஆரோக்கிய சேது செயலி கட்டாயம் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல், பெரும்பாலான விமானங்கள், விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது உள்நாட்டு விமான போக்குவரத்து வரும் 25-ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்‍கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் இயக்கப்படும் விமானங்களில் பயணிப்பவர்களுக்கு புதிய நடைமுறைகளை இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, உடல் வெப்ப நிலையை அளவிடும் தெர்மல் ஸ்கிரீனிங் பகுதி வழியாகச் சென்றே விமான நிலையத்திற்குள் பயணிகள் செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல், 14-வயதிற்குட்பட்ட சிறார்களைத் தவிர அனைவரும் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் நிறுவியிருக்க வேண்டும் என்றும், விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. பயணிகள் 2 மணி நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையத்திற்கு வரவேண்டும் என்றும் இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.


Share this News: