புதுடெல்லி (04 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் உயிரிழந்து பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார் நான்கு மாத குழந்தை.
இந்தியாவின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் மேன்மேலும் தீவிரமடைந்து வருகிறது.
டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ஷஹீன் பாக்கில் பெண்கள் 50 நாட்களை தாண்டியும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மிரட்டல் துப்பாக்கிச் சூடு போன்றவை நிகழ்ந்த போதும் எதற்கும் அச்சப்படாமல் அங்கு போராட்டம் தொடர்கிறது.
கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் இளையோர், முதியோர் என வயது வித்தியாசம் பாராமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், போராட்டக் களத்தில் பலரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவமும் நிகழந்துள்ளது. முகமது ஆரிஃப் மற்றும் நசியா தம்பதியின் நான்கு மாத மகன் முகமது ஜஹான்கான். வாட்டி வதைக்கும் குளிரில் இந்த குழந்தையும் போராட்டத்தில் பங்கேற்று தேசியக் கொடியை கையில் ஏந்தியது அண்மையில் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், கடந்த வாரம் ஜனவரி 30ம் தேதி இரவு போராட்டக்களத்தில் இருந்து வீடு திரும்பிய நசியா குழந்தையை உறங்க வைத்துவிட்டு தானும் தூங்கச் சென்றுள்ளார்.
மறுநாள் காலை எழுந்ததும் குழந்தை மூச்சு பேச்சின்றி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நசியாவும், ஆரிஃபும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு பனியின் காரணமாக கடுமையான காய்ச்சலுக்கு ஆளான குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். இது நசியா மற்றும் ஆரிஃபை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இருப்பினும், தனது மகன் உயிரிழந்து ஒருவாரம் ஆன நிலையில், மீண்டும் ஷஹீன் பாக் போராட்டக்களத்துக்கு வந்துள்ளார் நசியா. போராட்டக்காரர்கள் இருந்த குழந்தை தற்போது உயிருடன் இல்லை என்பது அறிந்து போராட்டக் காரர்கள் பெரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளனர்.