புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லியில் நேற்று ஏற்பட்ட வன்முறைக்கு காரணம் பாஜக தலைவர் கபில் மிஸ்ராதான் என்று சிஏஏ எதிர்ப்பு போராட்டக் காரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
டெல்லியில் 5 பேரை பலி கொண்ட பயங்கர வன்முறைக்கு பாஜகவின் கபில் மிஸ்ரா விடுத்த எச்சரிக்கைதான் காரணம் என குடியுரிமை சட்டத்திருத்திற்கு எதிராக போராடுபவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஷஹீன் பாக் பகுதியில் அமைதி வழியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிராக பாஜக தலைவர்கள் தொடர்ந்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி வருகின்றனர்.
டெல்லி ஷகீன் பாக் பகுதியில் போராட்டம் நடைபெற்ற போது, போராடும் அனைவரையும் துப்பாக்கியால் சுட வேண்டும் என்று பாஜக எம்பி பிரவேஷ் வர்மா பேசியது சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் நடைபெற்றன.
இது இப்படியிருக்க ஷகீன் பாக் போல ஜாபராபாத்திலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதற்கு எதிராக தமது ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு பாஜகவின் கபில் மிஸ்ராவும் சிஏஏ ஆதரவு போராட்டத்தில் குதித்தார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
அப்போது பாஜக தலைவர் கபில் மிஸ்ரா போராட்டக் காரர்களையும், போலீசையும் எச்சரித்துவிட்டு சென்றார். அதன்பிறகே போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக் காரர்கள் மீது நேற்று காலை காலை 11 மணியளவில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதனால் உச்சகட்ட பதற்றம் அங்கு நிலவியது.
இந்த வன்முறை சம்பவத்தில் ஒரு நபர் துப்பாக்கியால் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களை நோக்கி சுடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதனை தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதனால் 3.45 மணியளவில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மாலையில் ஒரு கும்பல் கடைகளை சூறையாடி வன்முறையில் இறங்கியது.
இப்படி காலை முதல் இரவு வரை நீடித்த தொடர் வன்முறைகளால் 5 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். பாஜகவின் கபில் மிஸ்ரா விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து இத்தகைய மோதல்கள் வெடித்து உயிர் பலிகள் ஏற்பட்டன என்பது சி.ஏ.ஏ. எதிர்ப்பாளர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இதனால் கபில் மிஸ்ராவை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் அவர் யார் என்பது கேள்விக்குரியாக உள்ளது.