புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லி வன்முறை தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் தலைமை காவலர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது.
முதலில் தலைமை காண்ஸ்டபில் ரத்தன் லால் உயிரிழந்ததாக போலீஸார் அறிவித்தனர். பின்பு மேலும் மூவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. பின்பு நான்கு என தகவல் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை ஐந்து ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த போராட்டத்தில் வாலிபர் ஒருவர் வானத்தை நோக்கி கைத்துப்பாக்கியால் சுட்டார். மேலும், காவல் துறையினரையும், சிவப்பு நிற டி ஷர்ட் அணிந்த அந்த நபர் மிரட்டினார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவியது.
இதையடுத்து, கைத்துப்பாக்கியுடன் வலம் வந்த அந்த நபர் யார் என போலீசார் தீவிரமாக விசாரித்து தேடி வந்தனர். இந்நிலையில் அந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். 33 வயதை ஒத்த இந்த நபருக்கு துப்பாக்கி எப்படி வந்தது ? என்றும் வேறு யாருடனும் தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.