ஐதராபாத் (06 ஏப் 2020): விதிகளை மீறி கூட்டமாக நின்று பாஜக எம்.எல்.ஏ கொரோனாவுக்கு எதிராக நடத்திய தீப்பந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகள் இதனை எதிர் கொள்ள முடியாமல் திணறி வருகின்றன. இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளன.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு பொதுமக்கள் மின்விளக்குகளை அணைத்து 9 நிமிட நேரம் அகல் விளக்குகளை ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று நாட்டின் பல பகுதிகளில் அகல் விளக்குகள், மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன.
ஆனால் பலர் பிரதமர் மோடியின் கோரிக்கையை சரிவர பின்பற்றாமல் வெடி வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். ராஜஸ்தானில் இதனால் குடிசைப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதும் கவனிக்கத் தக்கது.
இது இப்படியிருக்க தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங், தனது ஆதரவளர்களுடன் மெழுகுவர்த்திகளை கையில் ஏந்தியபடி Go back Corona என முழக்கமிட்டபடி தெருக்களில் மினி ஊர்வலமும் நடத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கொரோனா பரவலுக்கு மிக முக்கிய காரணமாக சமூக ஒன்றுகூடலையே கூறப்படுகிறது. இதனை பாஜக எம்.எல்.ஏவே பின்பற்றவில்லை என்றும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.