கொரோனாவை எதிர்த்து தீபாவளி – குடிசைகள் எரிந்து பயங்கர விபத்து!

Share this News:

ஜெய்ப்பூர் (06 ஏப் 2020): பிரதமர் மோடியின் வேண்டுகோளை அடுத்து ராஜஸ்தானில் தீபம் ஏற்றியபோது பட்டாசு வெடித்ததால் அவை குடிசைகளில் பட்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையில் மூன்றாவது முறையாக கரோனா குறித்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “வரும் ஞாயிற்றுக்கிழமை (05/04/2020) அன்று இரவு 09.00 மணிமுதல் 9 நிமிடங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டில் பல்புகளை அணைத்து செல்போன் டார்ச், அகல் விளக்குகள், மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை அடுத்து இந்தியாவின் முக்கிய பகுதிகளில் முக்கிய நகரங்களில் மக்கள் மெழுகுவர்த்தி மற்றும், தீபங்களை ஏற்றி கொரோனாவுக்கு எதிராக ஒற்றுமை தீபம் ஏற்றினர். தமிழகத்திலும் பல இடங்களில் வீடுகளில் தீபம் ஏற்றப்பட்டது. சில மாநிலங்களில் சிலர் பட்டாசுகளை வெடித்தும் கொரோனாவுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலும் இதேபோன்று தீபம் ஏற்றியவர்கள் எல்லை மீறி பட்டாசு வெடித்து தீபாவளியைப் போன்று கொண்டாடினார்கள். இதனால் சில பட்டாசுகள் பறந்து சென்று அருகில் இருந்த குடிசைகளில் விழுந்து பல குடிசைகள் எரிந்து போயின. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது எனினும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.


Share this News:

Leave a Reply