சென்னை (06 ஏப் 2020): பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகள் இதனை எதிர் கொள்ள முடியாமல் திணறி வருகின்றன. இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. பிரதமர் மோடியும் எதிர் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அறிஞர்களுடன் இது குறித்து ஆலோசித்து வருகிறார்.
இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், “கொரோனா குறித்து எதிர்கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்து ஆலோசிப்பதை அனைவரும் வரவேற்கிறோம். இந்தியா முழுவதும் மிகப்பரவலாக மிக அவசரமாக, மிக வேகமாக பரிசோதனை செய்ய வேண்டும், இதனை அரசு இன்றே தொடங்கவேண்டும். எல்லா மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக தமிழ்நாடு அரசு இந்தப் பரவலான அதிகமான பரிசோதனைத் திட்டத்தை இன்றே தொடங்கவேண்டும்.
பொதுமக்களுக்கு அதிக சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று வல்லலுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா இந்த வாரம் மிக முக்கியமான 2-வது வார காலத்திற்குள் நுழைகிறது. கொரோனா பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான அரசின் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தருகின்றனர். அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி இருந்தால் அது ஆக்கப்பூர்வமான விமர்சனமே” என்று தெரிவித்துள்ளார்.