புதுடெல்லி (25 மே 2020): CBSE பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கான பாதுகாப்பு நெறிமுறைகளை CBSE நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், CBSE பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இணையத்தில் வரம்புமீறிய செயல்கள் நடைபெறுவதாக எழுந்த புகாரையடுத்து ஆன்லைனில் செயல்பாடுகள் குறித்த வழிகாட்டு முறையை CBSE வெளியிட்டுள்ளது.
பிறருக்கு பகிரும் புகைப்படங்கள், வீடியோக்களில் கவனமாக இருக்க வேண்டும் எனவும், மாணவர்கள் ஆன்லைன் கலந்துரையாடுவதில் வரம்பு மீறக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவியர் பதிவேற்றும் புகைப்படங்கள் தவறானவர்களின் கைகளில் கிடைத்தால், அது பெரிய சிக்கலை ஏற்படுத்தும் எனவும் CBSE எச்சரித்துள்ளது. மாணவியர்களை மரியாதையுடனும், கண்ணியத்துடனும் அணுக வேண்டும் எனவும், புகைப்படம், வீடியோ கேட்கும் அறிமுகம் இல்லாதவர்களின் தொடர்பை உடனடியாக துண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.