புதுடெல்லி (19 ஜன 2020): குடியுரிமை சட்ட விவகாரத்தில் பிரதமர் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
ராய்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சிஏஏ, என்பிஆர், என்சிஆர் உள்ளிட்ட அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்று சொல்கிறார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, என்சிஆர் நாட்டில் நடைமுறைபடுத்தப்படாது என்கிறார். இங்கு யார் உண்மையைச் சொல்கிறார். யார் பொய் சொல்கிறார். இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக தெரிகிறது. அவர்களால் நாடு கஷ்டப்படுகிறது,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பாஜகவின் முதல் 5 ஆண்டு ஆட்சியில் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிமுறை அமல் செய்யப்பட்டது. இது நரேந்திர மோடியின் முடிவாக தெரிந்தது. ஆனால் கடந்த 7, 8 மாதங்களாக அனைத்து முடிவுகளும் அமித்ஷாவால் எடுக்கப்படுகிறது. அவர்தான் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்தார். சிஏஏ-வைக் கொண்டு வந்தார். தற்போது என்பிஆர்-ஐ அமல் செய்யப் பார்க்கிறார். நாட்டின் ஏழை மக்கள் எப்படி அவர்களின் குடியுரிமை நிரூபிக்க ஆவணங்களைத் தாக்கல் செய்வார்கள்,” என்றும் பாகல் கேள்வி எழுப்பியுள்ளார்.
என்பிஆர் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தால், அதில் தான் கையெழுத்திடப் போவதில்லை என்பதையும் பூபேஷ் பாகல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.