புதுடெல்லி (27 பிப் 2020): டெல்லி கலவரத்திற்கு காரணம் டெல்லி போலீஸே என்று குற்றம் சாட்டிய டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, தலைநகர் டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறப்படும் பாஜக தலைவர்கள் அனுராக் தாக்குர், பர்வேஷ் வர்மா, கபில் மிஸ்ரா ஆகிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனித உரிமை ஆர்வலா்களான ஹர்ஷ் மந்திர், ஃபரா நக்வி ஆகியோர் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.முரளீதர், தல்வந்த் சிங் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி முரளீதர், டெல்லி கலவரத்திற்கு காரணம் டெல்லி போலீஸே என குற்றம் சாட்டியிருந்தார். மேலும் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். நேற்றைய விவாதம் கடும் காரசாரமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இச்சுழலில் நீதிபதி முரளீதர் நேற்று நள்ளிரவு பஞ்சாப் உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்படுள்ளார்.
இதற்கிடையே நீதிபதி முரளீதர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.