மும்பை (06 ஏப் 2020): மும்பையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 40 பேருக்கு கொரோனா பாதித்ததால் அப்பகுதி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிக கொரோனா பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு நேற்று வரை 748 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று 33 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் எண்ணிக்கை 781-ஆக அதிகரித்துள்ளது. புனேவில் 19 பேர், மும்பையில் 11 பேர், சதரா, அகமெத்நகர் மற்றும் பல்கர் மாவட்டத்தில் தலா ஒருவர் என மொத்தம் 33 பேருக்கு கொரோனா புதிதாக தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
இந்நிலையில் ‘மத்திய மும்பையில் ஒக்கார்ட் குழுமத்திற்குச் சொந்தமான மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் 29 பேருக்கும் மருத்துவர்கள் 3 பேருக்கும் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது’, என தெரிவித்துள்ளது. இதையடுத்து அங்குள்ள அனைவரும் மருத்துவமனையிலேயே தங்கி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையை கட்டுப்பாட்டு மண்டலகமாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி வெளி ஆட்கள் உள்ளே செல்லவும், உள்ளே இருப்பவர்கள் வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல ஜாஸ்லோக் மருத்துவமனையில் 6 செவிலியர்கள் உட்பட 10 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த மருத்துவமனையும் சீல் வைக்கப்பட்டது.