லக்னோ (26 மார்ச் 2020): கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தன்னை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு டாக்டர் கஃபீல் கான் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,”கொரோனா வைரஸை எதிர்த்து நாம் அனைவரும் போராட வேண்டிய நேரம் இது. எனவே நாட்டில் நிலவி வரும் சூழலை கருத்தில் கொண்டு, கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு என்னால் ஆன முயற்சியையும் மேற்கொள்ளும் விதமாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டுகிறேன்.
மேலும் மாவட்டம் முழுவதும் குறைந்தது 1000 ஐசியு வார்டுகளையும், அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்களை தயாராக வைத்திருக்க வேண்டும். வீண் வதந்திகளுக்கும் முற்றுபுள்ளி வைக்க வேண்டும். எனவே இதனை நீங்கள் கருத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்” என்று அந்த கடிதத்தில் டாக்டர் கஃபீல் கான் தெரிவித்துள்ளார்.
கோராக்பூரில் ஆக்சிஜன் குறைவால் குழந்தைகள் உயிரிழந்தபோது, தனி மனிதனாக ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கி பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றியவர் டாக்டர் கஃபீல் கான். ஆனால் அவரது சேவைக்கு பரிசாக யோகி அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. பிறகு நீதிமன்றம் அவரை விடுவித்தது.
இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக மீண்டும் சிறையிலடைக்கப் பட்டார் டாக்டர் கஃபீல்கான்.
டாக்டர் கஃபீல்கானின் கடிதத்திற்கு பலதரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளதோடு, அவரை விடுவிக்கக் கோரி ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகிக் கொண்டு உள்ளது.