லக்னோ (26 மார்ச் 2020): உத்திர பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவையும் மீறி கூட்டம் கூட்டிய பெண் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆகையால் இந்த தொற்றுநோய் சமூக பரவலாக உருவெடுத்துவிடக் கூடாது என்பதற்காக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மத்திய அரசு.
இந்நிலையில் , உத்தர பிரதேச மாநிலத்தின், தியோரியா என்ற பகுதியில் ‘மா ஆதி சக்தி’ என்ற பெண் சாமியார் ஒருவர் ஆசிரமம் நடத்தி வருகிறார். இவர், அவரது ஆசிரமத்தில் அவரது பக்தர்களை கூட்டி பிரார்த்தனை கூட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக போலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
உடனே அங்கு விரைந்த போலீசார் கூட்டத்தை கலைந்து செல்ல வேண்டி வலியுறுத்தினர். ஆனால் அந்த பெண் சாமியார், அதற்கு மறுத்ததோடு போலீசாரையும் மிரட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த போலிஸார் அங்கு லேசான தடியடி நடத்தி கூட்டத்தை அப்புறப்படுத்தி பெண் சாமியாரை கைது செய்தனர். அதோடு மட்டுமல்லாமல், மா ஆதி சக்தியின் ஆசிரமத்தையும் பூட்டி சீல் வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.