குஜராத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பாஜக – கருத்துக்கணிப்புகள் வெளியீடு!

Share this News:

ஆமதாபாத் (05 டிச 2022): பாஜக தற்போது ஆண்டு வரும் மாநிலங்களான இமாச்சல் பிரதேசத்திலும், குஜராத்திலும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இமாச்சல் பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் 12ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 1ந்தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்துள்ளது. இரு மாநிலங்களில் பதிவான வாக்குகள் வரும் 8ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்பில் இமாச்சல் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 இடங்களில் பாஜக 38 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களைக் கைப்பற்றும் என்றும் இதர கட்சிகள் 2 இடங்களை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஒரு இடத்தைக்கூட கைப்பற்றாது என டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் பாஜக 131 இடங்கள் வரை கைப்பற்றி தொடர்ச்சியாக 6வது முறையாக ஆட்சி அமைக்கும் என டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் காங்கிரசுக்கு 41 இடங்களும், ஆம்ஆத்மிக்கு 6 இடங்கள் கிடைக்கும் என்றும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், நியூஸ் எக்ஸ், ரிபப்ளிக் டிவி போன்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பிலும் குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் குஜராத்தில் பாஜகவுக்கு இந்த முறை 120க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என கணித்துள்ளன. அங்கு மொத்தம் உள்ள 182 இடங்களில் கடந்த முறை 100க்கும் குறைவான இடங்களிலிலேயே வென்று பாஜக ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் இந்த முறை குஜராத்தில் மூன்றில் இரண்டு பங்குக்கு அதிகமான இடங்களில் வென்று பாஜக அமோக வெற்றி பெறும் என வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.


Share this News:

Leave a Reply