மாண்டியா (20 ஏப் 2020): முஸ்லிம்கள் போல் உடையணிந்து வந்து ‘கொரோனா பரப்பி விடுவோம்’ என மிரட்டிய மூன்று இந்துத்வா ரவுடிகளை மாண்டியா போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் உள்ள ஒரு காவல்துறை பரிசோதனை மையத்தில், முஸ்லிம்கள் அணியும் நீண்ட பைஜாமா, தொப்பி உள்ளிட்டவை அணிந்து வந்த மூன்று இளைஞர்களை போலீசார் நிறுத்தியுள்ளனர்.
உடனே அவர்கள், “நாங்கள் முஸ்லிம்கள்; கொரோனாவால் தனிமைப் படுத்தலில் உள்ளோம்; எங்களை கைது செய்ய நினைத்தால் உங்கள் மீது கொரோனா வைரஸைப் பரப்பி விடுவோம்!” என மிரட்டியுள்ளனர்.
அதன் பின்னர் அங்கிருந்து தப்பியோட முயன்ற மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். உரிய விசாரணைக்குப் பின்னர் அவர்கள் பெயர் மகேஷ், அபிஷேக் மற்றும் ஸ்ரீநிவாஸ் என்பதும், அவர்கள் மூவரும் இந்துத்வா இயக்கத்தைச் சேர்ந்த ரவுடிகள் என்பதும் தெரிய வந்தது.
“இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம்!” என்பதாக இந்துத்வாவினர் திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் பரப்பி வரும் சூழ்நிலையில், திடுக்கிடும் வகையில் இச்சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.