பெங்களூரு (13 ஜன 2023): இந்துக்கள் வீட்டுக்குள் ஆயுதங்கள் வைத்திருப்பது குற்றமல்ல என ஸ்ரீராம சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ளார்.
இந்து பெண்களின் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு இந்து வீடுகளிலும் ஆயுதங்கள் வைக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். கலபுர்கியில் நேற்று நடைபெற்ற இந்து சமயத் தலைவர்கள் கூட்டத்தில் பிரமோத் முத்தாலிக் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரமோத் முத்தாலிக் இவ்வாறான சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக ‘டெக்கான் ஹெரால்டு’ செய்தி வெளியிட்டுள்ளது. பேச்சின் வீடியோ பகுதிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இந்துக்கள் முன்பு ஆயுதங்களை வழிபட்டுள்ளனர். இப்போது நாம் பேனா, புத்தகங்கள் மற்றும் வாகனங்களை வணங்குகிறோம். காவலர்கள் தங்கள் துப்பாக்கிகளை வணங்குகிறார்கள், ஆவணங்களை அல்ல. ஆயுதங்களை வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்றார்.
மேலும், இந்துப் பெண்களிடம் வீட்டில் ஆயுதங்கள் இருந்தால் அவர்களைத் தொட யாரும் துணிவதில்லை. வீட்டில் ஆயுதம் வைத்திருப்பது குறித்து போலீசார் விசாரிக்க வந்தால் காளி, துர்க்கை, அனுமன், ஸ்ரீராமன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யச் சொல்லுங்கள் என்று அவர் பேசினார்.