குருகிராம் (28 மார்ச் 2022): அரியானா மாநிலம் குருகிராமில் பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து சன்யுக்த் ஹிந்து சங்கர்ஷ் சமிதி என்ற இந்துத்துவ அமைப்பு குருகிராமில் உள்ள மில்லினியம் சிட்டி முழுவதும் பொது இடங்களில் தொழுகை நடத்துவதை உடனடியாகத் தடை செய்யாவிட்டால், மாநிலம் முழுவதும் மாபெரும் போராட்டத்தை நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.
அதன் தலைவர் மகாவீர் பரத்வாஜ் தலைமையிலான 5 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு, துணை ஆணையர் யாஷ் கர்க்கிடம் பொது இடங்களில் நடத்தப்படும் தொழுகையை உடனடியாக தடை செய்யக் கோரி ‘நினைவூட்டல் கடிதத்தை’ சமர்ப்பித்தது.
இதே கோரிக்கையை கோரி கடந்த ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி துணை ஆணையரிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
“2018 ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்துடனான கூட்டத்தில் இரண்டு மத சமூகங்களின் குழுக்கள் மற்றும் உயர்மட்ட அரசியல் தலைவர்களால் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி, எந்த மதத்தையும் அல்லது சமூகத்தையும் சேர்ந்தவர்கள் பொது இடங்களை வழிபாட்டுக்காக பயன்படுத்த மாட்டார்கள். இந்த முடிவுக்கு முதலமைச்சரும் ஒப்புதல் அளித்துள்ளார்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக ஜும்மா தொழுகை (வெள்ளிக்கிழமை தொழுகை) வழங்குவதற்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.