புதுடெல்லி (20 ஏப் 2020): முஸ்லிம்கள் மீது குறிவைத்து திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்பிய ஊடகங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி, பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு முன்னாள் ராணுவ அதிகாரி கத்ரி கடிதம் எழுதியுள்ளார்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் சாதி மத பேதமின்றி அனைத்து சமூகத்தினரையும் ஒரு சேர பாதித்துள்ளது.
ஆனால் இந்திய ஊடகங்கள் கொரோனாவை எப்படி விரட்டுவது என்பதில் கவனம் செலுத்தாமல், கொஞ்சம் கூட அக்கறையின்றி முஸ்லிம்கள்தான் கொரோனாவை பரப்பினர் என்று பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தினர். குறிப்பாக அப்பாவி தப்லீக் ஜமாத்தினர் மீது அபாண்டமாக பழி சுமத்தினர்.
இவிவகாரம் தற்போது சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஊடகங்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் முஸ்லிம் விரோத போக்கிற்கு சர்வதேச அளவில் கண்டனங்களும் எழ தொடங்கிவிட்டன. முஸ்லிம் விரோத போக்கை கைவிட வேண்டும் எனவும், முஸ்லிம்களை எதிர்ப்போர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பிரதமர் மோடிக்கு சர்வதேச அளவில் பலரும் சமூக ஊடங்களில் கோரிக்கைகள் வைக்க தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் கத்ரி, பிரதமர் மோடி, ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் இந்தியாவின் பல்வேறு உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் பொய் தகவல்கள் பரப்பிய ஊடகங்கள், டிவி சேனல்கள், சமூக வலைதளங்களின் பதிவிட்டோர், மார்பிங் வீடியோக்களை பரப்பியவர்கள் என அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளர். மேலும் இந்திய இறையாண்மைக்கு எதிராக மத மோதல்களை தூண்டும் விதமாக, கொஞ்சம் கூட அச்சமின்றி செயல்பட்ட டிவி சேனல்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கத்ரி தெளிவு படுத்தியுள்ளார்.
மேலும் இந்தியாவில் கொரோனா பரவியது முதல், அதன் பிறகு அரசியல் கட்சிகள், அரசு, தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் என அனைவரும் நடத்திய அனைத்து கூட்டங்கள் குறித்தும் அதில் பங்கேற்ற ஆயிரக் கணக்கானோர் குறித்தும் ஆதாரங்களுடன் அதில் கூறியுள்ள மேஜர் கத்ரி, தப்லீக் ஜமாத்தினர் மீது மட்டும் குற்றம் சுமத்துவதன் நோக்கத்தையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார்.
இக்கடிதம் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.