கொல்லம் (11 பிப் 2020): பாஜக தலைவர் கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 9 பேருக்கு கொல்லம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே கடவூர் பகுதியை சேர்ந்த பா.ஜ.க தலைவர் கடவூர் ஜெயன் என்பவர், வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஒன்பது பேர் மீது, அஞ்சாலுமூடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே சிறையிலிருந்து பிணையில் விடுதலையான ஒன்பது பேரும், தலைமறைவாகினர்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில், போலீசார் அவர்களது படங்களுடன் நோட்டீஸ் வெளியிட்டு, 9 பேரையும் தேடி வந்தனர். அதை தொடர்ந்து, அவர்கள் திங்கள்கிழமையன்று, காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
இதையடுத்து 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலா ஒரு லட்சம் அபராதமும் செலுத்த வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.