மங்களூரு (22 ஜன 2020): மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த ஆதித்யா ராவ் என்ற பயங்கரவாதி காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளான்.
இருதினங்களுக்கு முன்பு மங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்புப் படையினர் வெடிப்பொருள் ஒன்றை கண்டு பிடித்தனர். அதை பாதுகாப்பாக தொலைவில் எடுத்து சென்று நிபுணர்களை கொண்டு பாதுகாப்பான முறையில் வெடிக்க செய்தனர்.
மேலும் வெடிகுண்டு வைத்தவன் ஆட்டோவில் வந்து விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்து விட்டு தலைமறைவான பயங்கரவாதியை போலீசார் தேடி வந்தனர்.
வரும் 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக, மாநில அரசுகளை மத்திய உளவுத்துறை எச்சரித்த நிலையில் மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த ஆதித்யா ராவ் என்ற பயங்கரவாதி அர்சூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளான். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.