புதுடெல்லி (26 ஜன 2020): மத்திய அரசின் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கான பத்ம விருதுகள் பட்டியலில் 7 பேருக்கு பத்ம விபூஷண், 16 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.
பத்மஸ்ரீ விருது பெறுபவர்களில் ஒருவர் 80 வயதான முகமது ஷரீப். உ.பி.,யில் ஜாதி மத பேதமற்று பல ஆதரவற்ற உடல்களை இவர் அவரவர் மத வழக்கப்படி அடக்கம் செய்துள்ளார். இவரின் சேவைக்காக இவ்வாண்டு பத்மஸ்ரீ விருதுகள் பட்டியலில் முஹம்மது ஷரீப் இடம்பெற்றார்.
உ.பி., மாநிலம் அயோத்தியில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை வைத்திருக்கும் இவர் இதுவரையில் பல்லாயிரம் உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார்.
இந்த சேவைக்கு அவரை தூண்ட காரணம் குறித்து கூறுகையில், “1993ம் ஆண்டில் சுல்தான்பூரில் வேலைக்கு சென்ற என் மகன் கொலை செய்யப்பட்டான்.
ஆதரவற்றவர் என கருதி போலீசார் அடக்கம் செய்தனர். ஆனால் அதுப்பற்றி எனக்கு ஒரு மாதம் கழித்து தான் தெரியவந்தது. அப்போது தான் ஆதரவற்றவர்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன். இதுவரை 3000 ஹிந்து மற்றும் 2500 முஸ்லிம் ஆதரவற்றவர்களின் இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்துள்ளேன். ” என்று தெரிவித்துள்ளார்.