அயோத்தி (18 டிச 2020): 2021 ஜனவரியில் இந்திய குடியரசு தினத்தன்று உத்திர பிரதேசத்தில் புதிய பாபர் மசூதி கட்டுவதற்காக அடிக்கல் நாட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்டுமானத்திற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம் ஜென்ம பூமி-பாப்ரி மஸ்ஜித் தளத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழி வகுத்ததுடன், மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அயோத்தியின் சோஹவல் தெஹ்ஸில் உள்ள தனிபூர் கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை மாநில அரசு ஒதுக்கியது.
இதனை அடுத்து சன்னி வக்பு வாரியத்தால் மசூதி கட்டுவதற்கு ‘இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த அறக்கட்டளை பாபர் மசூதி கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அது மசூதியின் வரைபடம் இந்த சனிக்கிழமையன்று வெளியிடப்படும், என்று தெரிவித்துள்ளது, மேலும் 2021 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மசூதி கட்ட ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில் அடிக்கல் நாட்டப்படும் என்று அறக்கட்டளையின் செயலாளர் அதர் உசேன் கூறினார்.
மசூதி வளாகத்தின் சிறப்பம்சமாக, பல்துறை சிறப்பு மருத்துவமனை, சமூக சமையலறை மற்றும் நூலகம் ஆகியவை அடங்கும், இதற்கான வரைபடத்தை தலைமை கட்டிடக் கலைஞர் பேராசிரியர் எஸ் எம் அக்தர் இறுதி செய்துள்ள நிலையில் அதன் வரைபடம் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது..
“மசூதியில் ஒரு நேரத்தில் 2,000 பேர் தொழும் வகையில் சுற்றளவு இருக்கும் மேலும் இந்த வளாகத்தின் அமைப்பு வட்ட வடிவமாக இருக்கும்” என்று அக்தர் பி.டி.ஐ யிடம் தெரிவித்தார்.
“புதிய மசூதி இடிக்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித்தை விட பெரியதாக இருக்கும், மசூதி வளாகத்தின் முக்கிய அம்சமாக மருத்துவமனை இருக்கும் . 1,400 ஆண்டுகளுக்கு முன்னர் முஹம்மது நபி தனது கடைசி பிரசங்கத்தில் கற்பித்த இஸ்லாத்தின் உண்மையான உணர்வின் அடிப்படையில் இது மனிதகுலத்திற்கு சேவை செய்யும், ”என்று அதர் உசேன் கூறினார்.
“மருத்துவமனை மசூதியின் கட்டிடக்கலைக்கு ஒத்ததாக இருக்கும், மேலும் கட்டிடம் இஸ்லாமிய சின்னங்களால் நிரம்பியதாக இருக்கும்,. இது 300 படுக்கைகள் கொண்ட ஒரு சிறப்புப் பிரிவைக் கொண்டிருக்கும், அங்கு வரும் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் , ”என்று அதர் உசேன் மேலும் கூறினார்,
அதேபோல அருகில் வசிக்கும் ஏழை மக்களின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சமூக சமையலறை ஒரு நாளைக்கு இரண்டு முறை நல்ல தரமான உணவை வழங்கும்.
“மருத்துவமனைக்கு மனித வளங்களை வழங்க நாங்கள் ஒரு நர்சிங் மற்றும் துணை மருத்துவக் கல்லூரியை நிறுவ முடிவு செய்துள்ளோம்., மேலும் முக்கியமான அறுவை சிகிச்சைகளின் அடிப்படையில் சிறப்புத் தேவைகளுக்காக, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ குழு தங்கள் சேவைகளை வழங்க விரும்புகிறார்கள், ”என்று அவர் கூறினார்.
அயோத்தியில் வரலாற்று சின்னமாக இருந்த பாபர் மசூதி ஒரு பண்டைய ராமர் கோவிலின் தளத்தில் கட்டப்பட்டதாகக் கூறி “கர் சேவகர்களால்” 1992 டிசம்பர் 6 ஆம் தேதி இடித்துத் தள்ளப்பட்டது. இது உலக அரங்கில் இந்தியாவுக்கு மாறாத வடுவாக இன்றும் இருப்பது குறிப்பிடத்தக்கது.