புதுடெல்லி (07 மார்ச் 2020): கொரோனா வைரஸ் குறித்த வதந்திகள் எதனையும் நம்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி ‘ஜன் ஆஷாதி யோஜனா’ பயனாளிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் சனிக்கிழமை பேசினார்.
அப்போது அவர், ‘கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயவுசெய்து உங்கள் மருத்துவரை அணுகவும். கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் சுகாதாரத்தை பேண வேண்டும். மற்றவருடன் கைகுலுக்குவதை தவிர்க்க வேண்டும்.
கொரோனா வைரஸ் உலகிற்கு முன்னால் ஒரு பெரிய சவாலாக வந்து நிற்கிறது. அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து நிலைமையை சமாளிக்க வேண்டும் என்று கூறினார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி 3,300 ஆக உயர்ந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், உலகம் முழுவதும் 1 கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.