அஹமதாபாத் (03 மார்ச் 2020): ரெயில் பயணிகள் பாதுகாப்பு குறித்த செயலி (APP) ஐ அறிமுகப்படுத்திய குஜராத் ரெயில்வே காவல்துறை அந்த ஆப்பில் பாகிஸ்தான் ரெயில் புகைப்படத்தைப் போட்டு அசிங்கப்பட்டுள்ளது.
”Surakshit Safar” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆந்த ஆப்பில் பாகிஸ்தான் ரெயில் புகைப்படத்தைப் போட்டதோடு அதனை பலருக்கு பகிரவும் செய்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்சி அடைந்து, சமூக வலைதளங்களில் விமர்சிக்கத் தொடங்கினர். இதனை அடுத்து குஜராத் ரெயில்வே போலீஸ் அந்த படத்தை நீக்கியுள்ளது.
இந்த ஆப்பின் மூலம், ரயில் பயணிகளுக்கு ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் குஜராத்தின் ரயில்வே காவல்துறை (ஜிஆர்பி) உதவியை நாடலாம். மேலும் ரெயில்களில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் காணப்பட்டாலும் புகார் அளிக்கலாம். மேலும் சந்தேகத்திற்கிடமான நபர்கள், பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள் குறித்தும் இந்த ஆப்பில் புகார் அளிக்கலாம்.
முன்னதாக இந்த ஆப்பை பிப்ரவரி 29 அன்று குஜராத் உள்துறை இணை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.