புதுடெல்லி (18 மார்ச் 2020): டெல்லியில் காய்ச்சல் இருமல் மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் நோயாளிகள் மருத்துவமனைகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் உலகமெங்கும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 139 ஐ தொட்டுள்ளது. மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் கொரோனா அறிகுறிகளுன் பொது மக்கள் மருத்துவமனைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால் வரும் நோயாளிகளில் கேட்கப்படும் கேள்விகள் மூலம் அவர்கள் வெளிநாட்டிலிருந்து சமீபத்தில் வந்தவராக இருந்தால் அவர்களுக்கு சோதனை செய்ய முன்னுரிமை அளிக்கிறோம். எல்லோருக்கும் ஒரே நேரத்தில் சோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்படுவதில்லை என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி எய்ம்ஸ் மற்றும் என்ஐவி புனே ஆகிய இரண்டு மருத்துவ மனைகளில் மட்டுமே கொரோனா சோதனை உள்ளதாகவும் ஒரு நாளைக்கு 25 முதல் 30 மாதிரிகள் மட்டுமே எடுக்க முடியும் என்றும், மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தீவிர அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாகவும், லேசான அறிகுறிகள் இருப்பின் அவர்கள் வீட்டில் சொந்தமாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.