புதுடெல்லி (28 ஜன 2020): CAA எதிர்ப்பு போராட்டங்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் நிதி உதவி என்ற குற்றச்சாட்டுகள் போலியானது! ஆதாரமற்றது என்று பாபுலர் ஃப்ரெண்ட் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தேசிய பொதுச் செயலாளர் எம். முஹம்மது அலி ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
CAA போராட்டத்தை தூண்டுவதற்கு பாப்புலர் ஃப்ரண்டின் நிதி உதவி என பல்வேறு செய்தி சேனல்களில் வெளியிடப்படும் செய்தி அறிக்கைகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முற்றிலும் மறுப்பதுடன் வன்மையாக கண்டிக்கவும் செய்கின்றது. முதலில், இந்த அறிக்கையை சில “பெயரில்லாத ஆதாரங்களை” (Unnamed Sources) சுட்டிக் காட்டி அதன் மூலம் அமலாக்கத்துறையுடன் செய்தி சேனல்கள் தொடர்பு படுத்தினர். ஆனால், அமலாக்கத்துறை எங்கள் இயக்கத்தை தொடர்பு கொள்ளவும் இல்லை, இந்த குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவுமில்லை.
73 வங்கி கணக்குகளை பாப்புலர் ஃப்ரண்ட் உடன் தொடர்புபடுத்தி இந்த கணக்குகள் மூலமாக CAA எதிர்ப்புப் போராட்டங்களுக்கு 120 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டதாக இந்த செய்திகள் கூறுகின்றன. இந்த நாட்டின் சட்டத்திற்கு நாங்கள் முழுமையாக கட்டுப்படுகிறோம் என்பதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பலமுறை தெரிவித்துள்ளது. CAA போராட்டத்திற்கு சற்று முன்னதாக பாப்புலர் ஃப்ரண்டின் கணக்குகளில் இருந்து 120 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது. இந்த குற்றச்சாட்டுகளை சுமத்தும் நபர்கள் அவற்றை நிரூபிக்க வேண்டும்.
இரண்டாவதாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநிலத்தில் இருந்து வழக்கறிஞர்கள் கபில் சிபல், துஷ்யந்த் தவே மற்றும் இந்திரா ஜெய்சிங் போன்றவர்களுக்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக சில செய்தி சேனல்கள் குற்றம் சாட்டுகின்றன. இந்தியாவில் நடைபெறும் எதற்கும் பாப்புலர் ஃப்ரண்ட்-ஐ குற்றம் சாட்டுவதில் குறியாக இருக்கும் சுயநலம் கொண்டவர்களை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. ஹாதியா வழக்கின் வழக்கறிஞர் கட்டணமாக இந்த வழக்கறிஞர்களுக்கு 2017-ல் இந்த பரிமாற்றங்கள் செய்யப்பட்டன என்பதுதான் உண்மை. இந்த பரிமாற்றத்தை பல்வேறு பொதுக்கூட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் வெளிப்படையாக அறிவித்துள்ளது. 2017இல் இடம்பெற்ற ஒரு கட்டண பரிமாற்றத்தை 2019 CAA போராட்டத்திற்கான நிதி அளிப்பாக கூறுவது முற்றிலும் அபத்தமானது. பாப்புலர் ஃப்ரண்ட் மீது அவதூறு கூறும் நோக்கத்தையும் இது தெளிவுபடுத்துகிறது.
பாப்புலர் ஃப்ரண்டின் காஷ்மீர் பிரிவுக்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக மற்றொரு குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. ஜம்மு மற்றும் கஷ்மீரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எந்த கிளையோ பிரிவோ கிடையாது என்பது வெளிப்படையானது. கஷ்மீரில் பாப்புலர் ஃப்ரண்ட்-ன் ஏதேனும் கிளை செயல்படுவதை நிரூபிக்குமாறு இந்த “பெயர் குறிப்பிடப்படாத ஆதாரங்களுக்கு” நாங்கள் சவால் விடுகிறோம். கஷ்மீரில் 2014-ல் விரிவான வெள்ள நிவாரண பணியை மேற்கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நூற்றுக்கும் அதிகமான வீடுகளை கட்டிக் கொடுத்தது. 2014 லேயே அதிகாரபூர்வ வெளியீடுகள் மூலம் இவற்றை எங்கள் இயக்கம் வெளிப்படையாக அறிவித்திருந்தது. 2014ல் செய்த வெள்ள நிவாரணத்தை 2019 CAA எதிர்ப்பு போராட்ட நிதியளிப்பு என்று கூறுவது பாப்புலர் ஃப்ரண்ட்-ன் வளர்ச்சியை தடுப்பதற்கான ஒரு திட்டமிட்ட இழிவுபடுத்தும் பிரச்சாரமாக இருப்பதை தெளிவாக்குகிறது.
இதற்கு முன் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் முடிவை போன்றே இந்த தொடர் குற்றச்சாட்டுகளின் முடிவும் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். சமீபத்தில் உத்தர பிரதேச மற்றும் அஸ்ஸாம் அரசுகள் CAA எதிர்ப்பு போராட்டம் தொடர்பான வன்முறையில் பாப்புலர் ஃப்ரண்ட்-ஐ குற்றம் சாட்டி எங்கள் மாநில அளவிலான தலைவர்களை கைதும் செய்தனர். ஆனால், நீதிமன்றத்தில் எதையும் நிரூபிக்க அவர்களால் முடியாமல் போனபோது, அவர்களின் கூற்று கற்பனைகளே அன்றி வேறல்ல என்பது எங்களின் தலைவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதின் மூலம் நிரூபணமானது.
எங்களை தடுத்து நிறுத்த விரும்பும் ஃபாசிசவாதிகளின் பின்துணையுடன் மலிவான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் சக்திகளால் பாப்புலர் ஃப்ரண்ட் பணிந்து விடாது. எதிர்ப்பின் குரல்களை அடக்க முயலும் ஃபாசிச சக்திகளுக்கு எதிரான எங்களின் போராட்டத்தை நாங்கள் தொடர்வோம்.
இவாறு அதில் கூறப்பட்டுள்ளது.