ஜாம்ஷெட்பூர் (20 ஏப் 2020): ஜார்கண்ட் மாநிலத்தில் ரத்தப் போக்கு காரணமாக சிகிச்சை பெற மருத்துவமனை சென்ற கர்ப்பிணி பெண் மீது மருத்துவ ஊழியர்கள் தாக்குதல் நடத்திய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரிஸ்வானா காத்தூன் என்ற 30 வயது பெண் ஒருவர் கருவுற்றிருந்த நிலையில் அவருக்கு கடுமையான ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜாம்ஷெட்பூர் (எம்ஜிஎம்) மகாத்மா காந்தி மெமோரியல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். ஆனால் அந்த மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு மருத்துவம் பார்க்க மறுத்துவிட்டனர். மேலும் கொரோனாவை பரப்ப வந்தாயா? எனவும் அவர் சார்ந்த மதத்தின் பெயரை கூறி மிரட்டியுள்ளனர்.
இதற்கிடையே அந்த மருத்துவமனை வளாகத்திலேயே கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். எனினும் விடாத அந்த ஊழியர்கள் அவரை கடுமையாக தாக்கியதோடு, ரத்தத்தை அவரையே சுத்தம் செய்ய வேண்டி வலியுறுத்தியுள்ளனர்.
இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப் பட்டுள்ளார். எனினும் அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
எம்ஜிஎம் மருத்துவமனையில் உரியமுறையில் சரியான சிகிச்சை அளிக்கப்படாததால் ரிஸ்வானா காத்தூனின் குழந்தையை அவர் இழக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சூரனுக்கு ரிஸ்வானா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவரை மருத்துவ ஊழியர்கள் தாக்கியதோடு, அவர் சார்ந்த மதத்தை கூறி கடும் வார்த்தைகளை உபயோகப்படுத்தியதாகவும், உரிய நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்காததால் என் குழந்தையையும் நான் இழக்க நேரிட்டுவிட்டது என்றும் ரிஸ்வானா கூறியுள்ளார்.
இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தி 48 மணி நேரத்தில் உரிய அறிக்கை தர வேண்டும் என்று போலீசாருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.