ஆக்ரா(22 நவ 2022): : தாஜ்மஹால் வளாகத்திற்குள் உள்ளதாக கூறப்படும் தோட்டப் பகுதியில் ஒரு பெண் தன்னுடன் அமர்ந்து ஆண் ஒருவர் ‘தொழுகை’ செய்வதாகக் கூறப்படும் வைரலான வீடியோவின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தொல்லியல் துறையின் ஆக்ரா வட்டத்தின் கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் குமார் படேல் கூறுகையில், “தாஜ்மஹால் வளாகம் என்று கூறப்படும் பகுதியில் ஒரு நபர் தொழுகை நடத்துவதைக் காணும் ஒரு வீடியோ வைரலாவதை நாங்கள் கண்டோம்.
“இருப்பினும், வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து எந்த உறுதியும் இல்லை, குறிப்பாக தாஜ்மஹாலில் உள்ள எங்கள் ஊழியர்கள் யாரும் அப்படி நடப்பதைக் காணவில்லை. நானும் ஞாயிற்றுக்கிழமை தாஜ்மஹால் வளாகத்தில் இருந்தேன், ஆனால் அப்படி ஒரு சம்பவத்தை பார்க்கவில்லை.
அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: தாஜ் வளாகத்தில் ‘தொழுகை’ வழங்க தடை இருப்பதால், தாஜ்மஹால் வளாகத்தில் உள்ள மஸ்ஜித் வளாகத்தில் மட்டும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ‘தொழுகைக்கு’ அனுமதியுண்டு, எனினும் இந்த விஷயத்தை நாங்கள் விசாரித்து வருகிறோம். அங்கு பாதுகாப்பு சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.
தாஜ்மஹால் முதலில் தேஜோ மஹாலயா என்று அழைக்கப்படும் சிவன் கோவிலாக இருந்ததாக கூறி வலதுசாரி இந்துத்துவாவினர் இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.