வயநாடு (30 ஜன 2020): பிரதமர் நரேந்திர மோடியும் நாதுராம் கோட்சேவும் ஒரே எண்ணம் கொண்டவர்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் நாடளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி தனது மக்களவைத் தொகுதியான கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள கல்பேட்டாவில் ‘அரசியலமைப்பைச் பாதுகாப்போம்’ என்னும் குடியுரிமை மற்றும் மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிரான பேரணி அணிவகுப்புக்கு தலைமை தாங்கினார்.
இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கான தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினார். கல்பேட்டாவில் உள்ள எஸ்.கே.எம்.ஜே உயர்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த பேரணி சுமார் இரண்டு கிலோமீட்டரை கடந்து நடைபெற்றது.
இந்த பேரணி நிகழ்ச்சியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய ராகுல் கூறுகையில்… “நாதுராம் கோட்சே மற்றும் நரேந்திர மோடி இருவருமே ஒரே சித்தாந்தத்தை நம்புகிறார்கள். ஆனால் நரேந்திர மோடிக்கு கோட்சே மீது நம்பிக்கை இருப்பதாக பொதுவெளியில் சொல்ல தைரியம் இல்லை என்பதைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை. நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியை சுட்டுக் கொண்டார். ஏனெனில் அவர் தன்னை நம்பவில்லை, அவர் யாரையும் நேசிக்கவில்லை, அவர் யாரைப்பற்றியும் கவலைபடவில்லை, அவர் யாரையும் நம்பவில்லை. நம் பிரதமரும் அதே மாதிரியானவர் தான். ஆனால், அவர் தன்னை மட்டுமே நேசிக்கிறார், தன்னை மட்டுமே நம்புகிறார்.” என தெரிவித்தார்.
மேலும், வேலையின்மை மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து நீங்கள் நரேந்திர மோடியிடம் கேட்கும்போதெல்லாம் அவர் திடீரென்று கவனத்தை திசை திருப்புகிறார் என்பதை கவனியுங்கள். என்றும் ராகுல் காந்தி சாடினார்.