எர்ணாகுளம் (27 மே 2020): தேவாலயம் செட்டை உடைத்தெறிந்தது தொடர்பாக இந்துத்வா அமைப்பினர் இருவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல மலையாள இளம் நடிகர் டோவினோ தாமஸ். இவர் ‘மின்னல் முரளி’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். ஸ்னேகா பாபு, அஜு வர்க்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன், பைஜூ சந்தோஷ் உட்பட முன்னணி நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தை, பிரபல இயக்குநர் பேசில் ஜோசப் இயக்கி வருகிறார்.
இந்த படத்துக்காக எர்ணாகுளம் அருகே காலடி மகாதேவர் கோயில் முன் தேவாலயம் வடிவில் செட் அமைக்கப்பட்டது. லாக்டவுனுக்கு முன்பே போடப்பட்ட இந்த செட், லாக் டவுன் அறிவிக்கப்பட்டதால் படப்பிடிப்பு இதுவரை நடத்தப்படாமல் இருந்தது. இதற்கிடையே கோயில் முன் சர்ச்சுக்கான செட் போட இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக போராட்டமும் நடந்தது. இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி இந்த செட்டை ஒரு கும்பல் சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
செட் உடைக்கப்பட்டது தொடர்பாக அந்தராஷ்ட்ர ஹிந்து பரிஷத், ராஷ்ட்ரிய பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் இதற்கு பொறுப்பேற்றன. ஆதி சங்கராச்சாரியார் மடத்துக்கு அருகில் இந்த ‘செட்’ அமைக்கப்பட்டிருப்பதாக அவை காரணம் கூறின.
இந்நிலையில் ரதீஷ் மலயத்தூர் (ராஷ்ட்ரிய பஜ்ரங் தளம் அமைப்பின் எர்ணாகுளம் மாவட்டத் தலைவர்), ராகுல் ஆகிய இருவரை கேரள போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். ராஷ்ட்ரிய பஜ்ரங் தளம் உறுப்பினர்கள் 7 பேர் மற்றும் பலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.