புதுடெல்லி (04 ஜூலை 2021): விமான தடை காரணமாக சவுதிக்கு செல்ல முடியாத இந்தியர்களை பயண முகவர்கள் சிலர் சிக்கலில் சிக்க வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இந்தியா சவுதி அரேபியா இடையேயான விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆரம்ப கட்டத்தில், துபாய், மஸ்கட்,பஹ்ரைன் வழியாக சிக்கலின்றி சிலர் சவூதி சென்றனர் . ஆனால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததால் இவற்றின் பாதை மூடப்பட்டது. இதனால் இந்தியர்கள் சவுதிக்கு பயணம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.
பஹ்ரைன், துபாய், மஸ்கட் பாதைகள் மூடப்பட்டவுடன் ரஷ்யா, ஆர்மீனியா மற்றும் உஸ்பெகிஸ்தான் வழியாக சவுதி அரேபியாவை அடைய முடியும் என்று பயண முகவர்கள் உறுதியளித்து பணம் பெற்றனர்.. ஆனால் கடந்த சில நாட்களாக தங்களுக்கு விசா கிடைக்கவில்லை என்பதை அறிந்து விமான நிலையத்திலிருந்து திரும்பிய பயணிகளும் உள்ளனர். இதற்காக ரூ .2 லட்சத்துக்கு மேல் செலுத்தி அதனை திரும்பப் பெற முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் முகவர்களிடம் பணம் செலுத்துவதற்கான சரியான ஆவணங்களை வைத்திருக்கவில்லை என்பதால் செலுத்திய பணத்தை திரும்பப் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. இதனால் இதுகுறித்து போலீசில் புகார் கூட கொடுக்க முடியாத சூழலில் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒன்றிய அரசு தலையிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.