புதுடெல்லி (24 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக, டெல்லியில் உள்ள ஷஹீன் பாக் பகுதியில், டிசம்பர், 15ம் தேதி முதல், தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே ‘கொரோனா’ அச்சுறுத்தல் காரணமாக, பொது இடங்களில் மக்கள் கூடக்கூடாது எனக்கூறி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து, டில்லி அரசு உத்தரவிட்டது. எனினும், ஷஹீன் பாக் போராட்டம் தொடர்ந்து வந்தது.
இந்நிலையில் 101வது நாளாக தொடர்ந்த இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் போராட்டத்தை விலக்கிக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
இதற்கிடையே போராட்ட கூடாரங்களும் போலீசாரால் அகற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.