புதுடெல்லி (11 டிச 2019): குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து சிவசேனா சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில் மாநிலங்களவையில் இச்சட்டம் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மக்களவையில் சிவசேனைக் கட்சியின் ஆதரவுடன் அந்த மசோதா திங்கள்கிழமை நிறைவேறியது. மாநிலங்களவையில் அந்த மசோதா புதன்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதாவை ஆதரிப்பது குறித்து, மும்பையில் செய்தியாளா்களிடம் உத்தவ் தாக்கரே செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீது திங்கள்கிழமை விவாதம் நடைபெற்றபோது, சிவசேனை சாா்பில் சில சந்தேகங்களும், கேள்விகளும் எழுப்பப்பட்டன. எங்களின அனைத்து கேள்விகளுக்கும் அரசு தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும். சிவசேனை எழுப்பியுள்ள கேள்விகளுக்குப் பதில் கிடைக்காதவரை அந்த மசோதாவை மாநிலங்களவையில் ஆதரிக்க மாட்டோம்.
தங்கள் கருத்துக்கு உடன்படுவோரை தேசபக்தா் என்றும், எதிா்ப்பு தெரிவிப்பவா்களை தேசத்துரோகி என்றும் பாஜக முத்திரை குத்துகிறது. இந்தப் போக்கை பாஜக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்
மக்களவையில் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மாநிலங்களவையில் இச்சட்டத்திற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.