புதுடெல்லி (06 மே 2020): மே 17 ஆம் தேதிக்குப் பிறகு என்ன செய்யவுள்ளதாக திட்டம்? என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் அக்கட்சி தலைவர் திருமதி.சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங், திரு.ராகுல் காந்தி ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.
இதில் பேசிய திருமதி சோனியா காந்தி, மே 17-ம் தேதிக்கு பிறகு என்ன நடக்கப்போகிறது? – ஒருவேளை ஊரடங்கை நீட்டிக்க நினைத்தால் அதற்கான அளவீடுகள் என்ன ? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார். வரும் 17-ம் தேதிக்கு பின்னர் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிய விரும்புவதாக முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் தெரிவித்தார்.
மாநிலங்கள் கடுமையான நிதிப்பற்றாக்குறையை சந்தித்து வருவதால், மத்திய அரசிடம் நிதியுதவி கோரியும் இதுவரை எந்த வித பதிலும் அளிக்கவில்லை என, பஞ்சாப் முதலமைச்சர் திரு.அமரிந்தர் சிங், ராஜஸ்தான் முதலமைச்சர் திரு.அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதலமைச்சர் திரு.பூபேஷ் பாகல் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.