கோழிக்கோடு (03 ஏப் 2023): கேரளா மாநிலத்தில் ஓடும் ரயிலில் பயணிகளுக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்ததில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு வந்துக்கொண்டிருந்தது. சரியாக இரவு 9.45 மணியளவில் ரயில் கோழிக்கோடு ரயில் நிலையத்தை கடந்து கோராபுழா ரயில்வே பாலத்தில் சென்றக்கொண்டிருக்கையில், மர்ம நபர் ஒருவர் ரெயிலுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
இந்த சம்பவத்தில் ஜஹாரா, ரஹ்மத் மற்றும் நௌஃபிக் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள உயிரிழந்தவர்களின் உறவினர் நாசர் ஊடகம் ஒன்றிற்கு தெரிவிக்கையில், மாட்டனூரைச் சேர்ந்த ரஹ்மத் மற்றும் இரண்டரை வயது ஜஹ்ரா இருவரும் நோன்பு திறக்க கோழிக்கோடு சாலியத்தில் உள்ள உறவினர் வீட்டில் நோன்பு துறந்து விட்டு மட்டன்னூருக்கு வந்து கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நடந்துள்ளது.
முன்னதாக விபத்தில் காலில் காயம் அடைந்து கொயிலாண்டி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர் ஒருவர் தன்னுடன் பயணித்தவர்களை காணவில்லை என தகவல் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலின் போது, ரயில் தண்டவாளத்தில் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. எலத்தூர் ரயில் நிலையம் அருகே உள்ள கோரபுழா பாலம் அருகே தீ விபத்து ஏற்பட்ட போது சங்கிலி இழுக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டது. காணாமல் போனவர்கள் ஆற்றில் குதித்திருக்கலாம் என முதலில் கருதப்பட்டது. ஆனால் தேடுதலின் போது இறந்த உடல்கள் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டன.
இதற்கிடையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளியை கண்டுபிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். . ரயிலை நிறுத்திவிட்டு மர்ம ஆசாமி பைக்கில் செல்வது சிசிடிவி காட்சிகளில் தெளிவாக உள்ளது. எனவே இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்ற முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர்