புதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனாவைரஸ் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், “அமித்ஷா எங்கே”என #WhereIsAmitShah என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.
ஷாகின் பாக்-கில் நடந்த தொடர் போராட்டங்களின்போதும் சரி, டெல்லி வடகிழக்குப் பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலானது வகுப்பு கலவரமாக மாறி 40 உயிரை காவு வாங்கியபோதும் சரி.. அமித்ஷா அமைதி காத்தது சர்ச்சைக்குள்ளானது.
டெல்லியில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் ஒரு பக்கம் கொதித்தது.. ”டெல்லி தேர்தல் நடந்தபோது, பிரச்சாரத்துக்காக மட்டும் ரொம்ப நேரம் ஒதுக்கிய அமித்ஷா, வகுப்புக் கலவரம் நடந்து மோசமான சூழல் நிலவிய போதும், அரசு சொத்துகள், தனியார் சொத்துகள் தீக்கிரையான போதும், ஏராளமான உயிர்கள் பலியானபோதும் அமித்ஷாவை எங்கும் காண முடியவில்லை.
தற்போது இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்று எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது… 27 பேர் உயிரிழந்துள்ளனர்.. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது..
பெரும்பாலானோர் சொந்த ஊர் செல்ல முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.. வீடில்லாமல், சாப்பிடவும் வழியில்லாமல் எண்ணற்றோர் சிக்கி வருகின்றனர்.. வெளியூர் ஹாஸ்டல்களில் மாணவர்கள் அங்கிருந்து இடம் பெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
லாக் டவுன் என்று சொல்லிவிட்டாலும், அசாம் மாநிலத்தில் கடைகளை மூடச் சொன்ன போலீசார்கள் மீது கடைக்காரர்கள் கற்களால் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை தந்துள்ளது.. நேற்றிரவு நடைபயணமாக டெல்லியில் இருந்து உத்தர பிரதேசம் நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக நடக்க ஆரம்பித்துவிட்டனர்.. இப்போதும் அமித்ஷா அமைதியாக காலம் கடத்துகிறார்.
இதையடுத்துதான் ட்விட்டரில் “அமித்ஷா எங்கே”என #WhereIsAmitShah என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. ஒரு உள்துறை அமைச்சர், இப்படித் தொழிலாளர்கள், இடம் பெயர்ந்த மக்கள் தங்களது இருப்பிடங்களுக்குப் பாதுகாப்பான முறையில் செல்ல போதிய ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டாமா.?. என்பதுதான் ஹேஷ்டேக்கை டிவீட் செய்பவர்களின் ஆதங்கமாக உள்ளது.
இன்னொரு பக்கம் ஆஸ்பத்திரியில் போதிய உபகரணங்கள் இல்லை என்கிறார்கள்.. முக்கியமாக வெண்டிலேட்டர் வசதி போதிய அளவில் இல்லை என்ற தகவலும் வந்து கொண்டிருக்கிறது… இதற்கு பிரதமர் நிதி ஒதுக்கீடு செய்திருந்தாலும், நடைமுறை சிக்கல்கள் தீரவில்லை.. இதை பற்றியும் உள்துறை அமைச்சர் அமித்ஷா எந்தவித பதிலோ அறிவிப்போ வெளியிடாமல் இருப்பதுதான் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது இப்படியிருக்க அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், உள்ளிட்டவர்கள் அமித் ஷாவின் அமைதியை கடுமையாக விமர்சித்துள்ளனர்.