உறைந்து போயிருக்கும் உலக மக்கள் – சிகிச்சை அளிப்போரையும் தாக்கும் அபாய சங்கு!

Share this News:

சீனா ஏதாவது ஒரு வைரஸ் நோயால் பாதிக்கப் பட்டுக் கொண்டே உள்ளது. முன்பு சார்ஸ் இப்போது கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இருபது நாள்களுக்குள் தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் இந்த வைரஸ் வேகமாகப் பரவியதால், உலக நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன.

ஜனவரி 1 அன்று, சீனாவின் உஹான் நகரில் 61 வயதான ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாள்களில் மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் தொற்று சிகிச்சைக்காக, பலரும் மருத்துவமனைக்கு வந்தனர். ஒரு வாரத்தில் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60-யைக் கடந்தது. இதுவரை ஆறு பேர் உயிரிழந்துவிட்டனர். ஏழு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

நோயாளிகளின் ரத்தத்தைப் பரிசோதித்ததில், அவர்களை விநோதமான ஒரு வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது சார்ஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த `கொரோனா வைரஸ்’ என்பதை உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதால், சீனா அதிர்ந்து கிடக்கிறது. ஏனெனில், 2002-ம் ஆண்டில் சீனாவை சார்ஸ் நோய் தாக்கியபோது, 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 26 நாடுகளில் உள்ள 8,000 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். 2004-ம் ஆண்டில்தான் அதன் தாக்குதலில் இருந்து சீனா மீண்டது.

தற்போது, நிலைமை அதைவிட மோசம். புதிய வைரஸ் எப்படி உருவானது, எப்படிப் பரவும் என்பது ஆய்வாளர்களுக்கே புரியாத புதிராக இருக்கிறது. அதன் பாதிப்புகள் சார்ஸைவிட மோசமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சாதாரண சளி, குளிர்ஜுரம்தான் இந்த நோயின் அறிகுறிகள். பிறகு நிமோனியா, நுரையீரல் பாதிப்பு என அதன் தாக்கம் தீவிரமடையும். கடைசியில் மரணம் நிகழும்.

சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுவையும் இந்த வைரஸ் தாக்கியிருப்பதால், தொற்று ஏற்படும் வாய்ப்பும் அதிகம். அதனால், இது மிகவும் அபாயகரமானது என்கின்றனர் ஆய்வாளர்கள். இதுவரை, சீனாவில் 1,725 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என லண்டன் இம்பீரியல் கல்லூரி தெரிவிக்கிறது. இந்த வைரஸ் பரவும் வேகம் மருத்துவ உலகை அச்சத்தில் உறையவைத்துள்ளது. முதலில் இந்த வைரஸ் தாய்லாந்துக்குப் பரவியது. அடுத்து, ஜப்பானில் பரவியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிய கொரோனா வைரஸ் விலங்குகள் மூலம் பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், சீனாவின் உஹான் இறைச்சிச் சந்தை உடனடியாக மூடப்பட்டுவிட்டது. இந்த நிலையில், அடுத்த வாரம் சீனாவில் புத்தாண்டு விடுமுறை தொடங்கவுள்ளதால், லட்சக்கணக்கான சீனர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்யவிருக்கிறார்கள். நிலைமை என்னவாகும் என உலக நாடுகள் அச்சத்தில் தவிக்கின்றன. அதேசமயம், சீனர்களின் வெளிநாட்டுப் பயணத்துக்கு இதுவரை எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.


Share this News:

Leave a Reply