துபாய் (27 மே 2020): கோவிட் 19 விதிமுறைகளை தளர்த்துவதன் மூலம் துபாய் இன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
ரம்ஜான் பண்டிகை விடுமுறை முடிவுற்ற நிலையில் இன்றிலிருந்து துபாயில் பொது வாழ்க்கை மற்றும் வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஐம்பது சதவீத ஊழியர்கள் தொழிலாளர் அமைச்சகத்தினால் அலுவலகங்களுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இது 30 சதவீதமாக இருந்தது.
உணவகங்களில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மேலும் 30 சதவீதம் பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் திரையரங்குகளில் கிருமிநாசினிகள் அடிக்கப்பட வேண்டும். துபாய் மெட்ரோ சேவை காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும்.
தேவைப்படுபவர்களுக்கு ஜிம்கள், முடிதிருத்தும் கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் இயங்கும். எல்லா இடங்களிலும் கையுறைகள் மற்றும் முகமூடிகள் கட்டாயமாகும்.
60 வயதுடையவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் அல்லது ஒன்பது வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் தாய்மார்கள், வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டிலிருந்தபடியே பணி செய்யலாம்.
ஷார்ஜாவில் உள்ள சுற்றுலா இடங்களிலும் சில கட்டுப்பாடுகளுடன் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.