துபாய் (27 ஜூலை 2021): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்தியர்களுக்கு துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு 17 வகையான வழிமுறைகளை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழிலாளர் சட்டம் குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அந்த வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பணிபுரியும் இந்தியர்கள் அனைவருக்கும் அவசரத் தொலைபேசி எண்கள் இருக்க வேண்டும். பணியிடத்தில் மன மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சரியான நேரத்தில் தெரிவிக்கப்பட வேண்டும்.
பணி அனுமதி ரத்து செய்யப்படுவதற்கு முன்பு வேலை தொடர்பான புகார்கள் மற்றும் பிரச்சனைகளை தெரிவிக்கப்பட வேண்டும். பணத்தைப் பெறுவதற்கும் அனுப்புவதற்கும் சட்ட வழிமுறைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அதை தவிர்த்து சட்டத்திற்கு புறம்பாக பண நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. மோசடிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும்.
சமூக ஊடகங்களை ஒழுக்கம் சார்ந்து பயன்படுத்த வேண்டும். மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ, மத உணர்வுகளைத் தூண்டும் வகையிலோ சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் புகைப்படங்களையோ வீடியோக்களையோ எடுக்கக் கூடாது என்றும் தனிநபர்களின் புகைப்படங்களை, அவர்களின் அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிடக்கூடாது என்றும் அந்த வழிகாட்டுதலில் குறிப்பிடப் பட்டுள்ளது.