ஜித்தா (22 ஜன 2023): சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா விமான நிலையத்தின் செயல்பாடுகளை எளிதாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ரமலான் மாதத்தில், ஜித்தா விமான நிலையத்தில் பல பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் சரியான நேரத்தில் புறப்பட முடியாமலும், விமான நிலையத்திலிருந்து வெளியே வர முடியாமலும் சிரமப்பட்டனர்.
இச்சம்பவத்திற்குப் பிறகு விசாரணையில் பல காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குழுக்களாக வரும் உம்ரா யாத்ரீகர்களின் தன்மை, அதிக அளவு மற்றும் சாமான்களின் எடை, பணியாளர் எண்ணிக்கை மற்றும் தகுதியின்மை, பல்வேறு துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு இல்லாமை ஆகியவை முக்கிய காரணங்களாக கண்டறியப்பட்டன.
சிவில் விமானப் போக்குவரத்துத் தலைவர் அப்துல் அசிஸ் அல் துவாலிஜ், இதுபோன்ற அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுள்ளன என்றார். இதன் ஒரு பகுதியாக, தேவையான அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஹஜ் டெர்மினலை இனி ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படும் என்றும், இதனால் நெரிசல் கணிசமாகக் குறையும் என்றும், அப்துல் அஜீஸ் அல் துவாலிஜ் கூறியுள்ளார்.