டோக்கியோ (02 ஆக 2021): டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற சம்பவம்தான் உலகமெங்கும் பேசுபொருள் ஆகியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில், கத்தாரின் முதாஜ் எஸ்ஸா பார்ஷிம் என்பவரும் இத்தாலியின் டம்பேரி என்பவரும் தங்கப் பதக்கத்திற்காக கடுமையாகப் போராடினார்கள்.
இருவருமே 2.37 மீ உயரம் தாண்ட, எஞ்சியவர்களால் முடியாமல் போனது.
அதன் பின் இருவருக்கும் 2.37 மீ விட உயரமாக வைத்து இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முயற்சி செய்தது ஒலிம்பிக் கமிட்டி.
மூன்று முறை முயன்றும், இருவராலும் தாண்ட முடியவில்லை. இறுதியாக ஒரே ஒரு சான்ஸ் கொடுக்க, அதில் இத்தாலி வீரர் டம்பேரிக்கு கால் அடி பட்டது.
கடும் வலி காரணமாக, போட்டியில் இருந்து பின் வாங்குவதாக அறிவித்தார் இத்தாலிய வீரர்.
ஆனால் கத்தார் வீரர் அதன்பின் செய்த சிறப்பான செயல்தான் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
ஒலிம்பிக்கில் தங்கம் உறுதியாகி விட்ட சூழ்நிலையில் நடுவர்களிடம் சென்று, “ஒருவேளை நானும் போட்டியில் இருந்து விலகி விட்டால் என்ன செய்வீர்கள்? ” என்று கேட்டார் கத்தார் வீரர் முத்தாஜ் எஸ்ஸா பார்ஷிம்.
“வேறு வழியின்றி தங்கப் பதக்கத்தை ஒலிம்பிக் கமிட்டி இருவருக்கும் பகிந்தளிக்கும்” என்று கூற, உடனே கத்தார் வீரரும் போட்டியில் இருந்து பின் வாங்குவதாக அறிவித்தார். கத்தார் வீரரின் பெருந்தன்மையைக் உணர்ந்து, அவரை இத்தாலிய வீரர் கட்டிப் பிடித்து கதறி மகிழ்ந்த சம்பவம் கண்டு பார்வையாளர் நெகிழ்ந்தனர்.
அதன் பிறகு, இருவருக்கும் தங்க பதக்கம் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
ஒலிம்பிக் வரலாற்றிலேயே இது மிக அற்புதமான தருணங்களில் ஒன்று என்று கணிக்கப் படுகின்றது.
எதிர் வீரரின் திறமையையும் விடாமுயற்சியையும் மதித்து அவரும் தங்கப் பதக்கம் பெற தகுதியானவரே என நினைத்த கத்தார் வீரர், உலகமெங்கும் அனைவராலும் பாராட்டப் பட்டு வருகிறார்.