இஸ்லாமாபாத் (29 டிச 2019): பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டானிஷ் கனிரியா குறித்த சர்ச்சைக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பதிலடி கொடுத்துள்ளார்.
பாகிஸ்தான் அணியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் தானிஷ் கனேரியா. அந்த அணியின் ஒரே இந்து வீரரான இவர் தன் திறமை மூலம் பாகிஸ்தான் அணிக்குப் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறார். ஆனால், முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அக்தர். டிவி பேட்டி ஒன்றில், டானிஷ் கனிரியா சக வீரர்களால் அவமானப் படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டை வைத்தார். .
இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய கனேரியா, “அக்தர் சொன்னது உண்மைதான். உண்மையைச் சொன்னதுக்காக அவருக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். நான் இந்து என்பதால் நான் ஒதுக்கப்பட்டேன்” என்றார்.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், ”கனேரியா பெரும்பாலும் எனது தலைமையில்தான் பாகிஸ்தான் அணியில் விளையாடினார். மற்ற வீரர்கள் கனேரியா இஸ்லாமியர் இல்லை என்பதானல் அவரை ஒதுக்கியதாக எனக்கு தெரியவில்லை. நான் அணியில் இருந்தவரை அப்படி ஒரு சம்பவம் கூட நடக்கவில்லை.
யூசஃப் அணியில் சேரும்போது இஸ்லாமியர் கிடையாது. அதன் பின்னர் அவர் கடவுளின் அருளால் இஸ்லாம் மதத்தைத் தழுவினார். அவர் மதம் மாறுவதற்கு முன்னதாகவோ பிறகோ எந்த வேறுபாட்டையும் உணரவில்லை.
2004 -ம் ஆண்டு இந்திய அணி 15 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் சுற்றுப்பயணம் வந்தது, அவர்களை நாங்கள் திறந்த மனதுடன் வரவேற்றோம். அவர்களுடன் ஒன்றாக உணவு அருந்தினோம்.
ஓராண்டு கழித்து நாங்கள் இந்தியாவுக்குப் பயணமானோம். இந்த இரு தொடர்களின் போதும் நான்தான் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்தேன். இந்தியாவிலும் எங்களுக்கு அதே போன்ற வரவேற்பும் அனுபவமும்தான் கிடைத்தது.
2005 -ம் ஆண்டு இந்தியாவில் கங்குலி அங்கு ஓர் உணவகத்தைத் திறந்திருந்தார். அதனை நானும் சச்சினும் இணைந்து திறந்து வைத்தோம். அங்கு ஒன்றாக சாப்பிட்டுள்ளோம். ஷார்ஜாவில் தொடர்கள் நடக்கும் போது ஒரே ஹோட்டலில் உணவு உண்போம். அப்போது எல்லாம் ஜாலியாகப் பேசிக்கொண்டே சாப்பிடுவோம்.” என்றார்.